வாட்ஸ்அப்-க்கு குட் பை… வந்து விட்டது அரட்டை… Arattai-யில் எல்லாமே இருக்கு..!!

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வரி விதித்துள்ளார். மேலும் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றுவோரை தடுக்கும் வகையில் எச் 1பி விசாவின் கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார்.

இதனால் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படும் ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலியை (Arattai) ஏராளமானவர்கள் டவுன்லோட் செய்து வருகின்றனர். ஆப்ஸ்டோரில் வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி அரட்டை முதலிடம் பிடித்துள்ள நிலையில் ஜோஹோ நிறுவனத்தின் சர்வர்கள் முடங்கி உள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வன்மத்துடன் செயல்பட்டு வருகிறார். முதலில் 50 சதவீத வரிகளை விதித்தார். அதன்பிறகு அமெரிக்காவில் அதிகமான இந்தியர்கள் பிரபல ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனை தடக்கும் வகையில் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதனால் இந்தியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதன்மூலம் டிரம்ப் ”அமெரிக்கா தான் பர்ஸ்ட்.. அமெரிக்கர்கள் தான் பர்ஸ்ட்” என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே தான் டிரம்பின் செயலால் நம் நாட்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா ஆப்களுக்கு எதிராக பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அமெரிக்காவை தலைமையிடாக கொண்டு செயல்படும் உணவு நிறுவனங்கள், டீ ஷாப்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடியும் உள்நாட்டு நிறுவனங்களின் பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார்.

அந்த வகையில் வாட்ஸ்அப் செயலிக்கு பதில் பலரும் அரட்டை (Arattai)என்ற செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த செயலியும் வாட்ஸ்அப் போன்றது தான். தனிப்பட்ட முறையிலும், குரூப் தொடங்கியும் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம். வீடியோ மற்றும் ஆடியோ கால் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இந்த செயலி தமிழகத்தை மையப்படுத்தி செயல்பட்டு வரும் ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்பாகும். அதோடு இந்த செயலியின் சிம்பள் ‘அ’ என்ற தமிழ் எழுத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்போது இந்த அரட்டை செயலி அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கூகுள் பிளேஸ்டோரில் வாட்ஸ்அப்பை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை இந்த செயலி பெற்றுள்ளது. திடீரென்று அதிகப்படியாக செயலி டவுன்லோட் ஆவதால் அரட்டை செயலியின் சர்வர் முடங்கி உள்ளது. நேற்று இரவு இந்த சர்வர் பிரச்சனையை எதிர்கொண்டது.

இதுபற்றி அரட்டை செயலி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ”டியர் அரட்டை பயனாளர்களே உங்களில் சிலர் ஓடிபியை காலதாமதமாக பெறுவீர்கள். இல்லாவிட்டால் ஓடிபி கிடைக்காது. கான்டக்ட் சிங்க் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகளை சந்திக்கலாம். சர்வரில் ஏற்பட்ட அதிகப்படியான லோட் தான் இதற்கு காரணம். நாங்கள் அதற்கான உள்கட்டமைப்பை விரிவுப்படுத்துகிறோம். இதனால் ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு வருவோம். உங்களின் பொறுமைக்கும், ஆதரவிற்கும் நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நம் நாட்டில் பயன்பாட்டில் உள்ள வாட்ஸ்அப்பிற்கு பதிலாக முழுவதுமாக அரட்டை செயலியை மக்கள் பயன்படுத்துவார்களா? என்றால் அது கேள்வி குறிதான். ஏனென்றால், நம் நாட்டில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப்புக்கு பதில் அரட்டை நோக்கி செல்ல வாய்ப்பில்லை. ஆனால் டிரம்பின் நடவடிக்கையால் அரட்டை செயலியின் பயன்பாடு நம் நாட்டு மக்களிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.