ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத அசைவ திருவிழாவில் , 60 ஆடுகள் பலியிடப்பட்டு , 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அனுப்பபட்டி கிராம காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல், வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்த விழாவில் பலியிடப்படும் ஆடுகள், கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. வளரும் இந்த ஆடுகள் மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வயல் மற்றும் விளை நிலங்களில் உணவை தேடி செல்லும் போது, அந்த ஆடுகளை யாரும் விரட்ட மாட்டார்கள். முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

காலை 8 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு துவக்கினர். பின்னர், நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 60 ஆடுகள் பலியிடப்பட்டு, உணவாக சமைக்கப்பட்டது. 50 மூட்டை அரிசியில் சாதம் தயாரானது. கரும்பாறை முத்தையா சுவாமிக்கு உருவம் கிடையாததால், அங்கு சமைக்கப்பட்ட அன்னத்தை மலை போல் குவித்து., பிறகு கறி குழம்பு எடுத்து வந்து அன்னத்தில் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து., சுமார் 10க்கும் மேற்பட்ட அண்டாக்களில் தயாராக இருந்த கறி குழம்பில், கறிகளை மட்டும் தனியாக பிரித்து, ஒரு இடத்தில் மொத்தமாக கொட்டி வைத்து ,கறியில் உள்ள எலும்புகளை தனியே பிரித்து எடுத்து விடுவார்கள்.
அதன் பின்னர் கறிகளை எடுத்து அனைவருக்கும் பரிமாறுவார்கள். முதலில் கறியை வைத்த பின், சாதம் அதன் பின்னர் கறி குழம்பு ஊற்றி அன்னதானம் நடைபெறும். இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது. இலை போட்டு சாதம், ஆட்டுக்கறி குழம்பும், ஆண்களுக்கு பிரசாதமாக பறிமாறப்பட்டது. சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த இலைகள் காய்ந்து, அங்கிருந்து மறைந்த பிறகு பெண்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவர். இன்று நடந்த கறி விருந்தில் திருமங்கலம், கரடிகல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு அன்னதான விழாவிற்காக பக்தர்கள் இப்போதே நேர்த்திக் கடனாக, ஆடுகளை வழங்கினர். நேர்த்தி கடனாக வழங்கப்படும் ஆடுகள், கருப்பு ஆடுகளாக மட்டுமே வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.









