கோவையில் பல வீடுகளில் கார் டிரைவர் மற்றும் வீட்டு வேலைக்கு ஆண் – பெண்களை பணி அமர்த்தி வருகிறார்கள்.ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் டாக்டர் வீட்டில் வேலை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை – பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியது. இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் தடுக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் கூறியதாவது:- பொதுவாக வீட்டு வேலை செய்யவே ஆட்களை பணியில் அமர்த்துகிறார்கள். நன்கு தெரிந்தவர்கள் அல்லது உறவினர்களை பணிக்கு அமர்த்துவத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. முன்பின் தெரியாதவர்களை வேலைக்கு சேர்க்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது புதிதாக வேலைக்கு சேர்க்கும் போது போலீசிடம் சான்றிதழ் பெற்று வர அறிவுறுத்த வேண்டும் .அந்த நபர் தன் மீது எந்த குற்றமும் இல்லை என்று சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் அவர் மீது ஏதாவது குற்றம் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து போலீஸ் தரப்பில் சான்றிதழ் வழங்கப்படும்.அந்த சான்றிதழ் பெற்றவர்களை மட்டும் வீட்டுவேலைக்கு சேர்ப்பது மிகவும் நல்லது .இந்த சான்றிதழை வேலையில் சேரும் நபர்தான் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வேலையில் சேர்க்கப்பட உள்ள வரின் ஆதார் கார்டு அந்த நபரின் புகைப்படத்துடன் வேலைக்கு அமர்த்து பவர் ஆன்லைனில் விண்ணப்பித்தால் அந்த நபர் மீது ஏதாவது குற்றங்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்து போலீசார் சான்றிதழ் தருவார்கள். எனவே கோவை மாநகரில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டில் டிரைவர் மற்றும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் போது இது போன்ற சான்றிதழை பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இவர் அவர் கூறினார்.







