தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை எச் வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ், நடிகைகள் சிம்ரன், சமந்தா, பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற அக்டோபர் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்று தெரிய வருகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்னும் கிராமத்தில், மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 50,000 பேர் வரை கலந்துக்கொள்ள கட்சியினருக்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இந்த அரசியல் மாநாடு நடப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர். பிரமாண்ட மேடை, பந்தல் ஏற்பாடு, இருக்கைகள் வசதி, குடிநீர், கழிப்பிடங்கள் வசதி, வாகனங்கள் பார்க்கிங் வசதி, உணவு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய், மாநாட்டில் கலந்து கொள்ள வரும் தனது கட்சி தொண்டர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியிருக்கிறார். இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, வரும் அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கும் அரசியல் மாநாட்டிற்கு வருகை தரும் கட்சி தொண்டர்கள், எக்காரணம் கொண்டும் மது அருந்திவிட்டு வரக்கூடாது.
சாலையில் வரும்போது மற்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலைகளில் சாகசங்களில் ஈடுபடக்கூடாது. கிணறு மற்றும் ஆபத்தான வளைவு பகுதியில் மெதுவாக கவனமாக வரவேண்டும்.
மருத்துவ குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பேருந்து மற்றும் வேன்களில் வருபவர்கள் தகுந்த எண்ணிக்கையில் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்சி மாநாட்டை பொருத்த வரை, விஜய் அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். அதனால் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் இந்த மாநாடு குறித்து அதிக கவனம் பெற்றிருக்கிறது.
Leave a Reply