கடலூரில் கள்ளநோட்டு அச்சடிப்பு : ஒரு மாதம் டிமிக்கி கொடுத்து வந்த விசிக முன்னாள் நிர்வாகி கர்நாடகாவில் சிக்கினார்.!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள விசிக நிர்வாகி செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த ஷெட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

போலீசார் வரும் தகவல் முன்பே தெரிந்ததால் கள்ள நோட்டு அச்சடித்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. போலீசாரின் சோதனையில், அங்கு 85,000 ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 4 வாக்கி டாக்கிகள், போலீஸ் சீருடைகள், பிரிண்டிங் மெஷின், கம்ப்யூட்டர், லேப்டாப், பிஸ்டல் ஏர் கன், ரிசர்வ் வங்கி போலி முத்திரை, பேப்பர் பண்டல்கள், பணம் எண்ணும் இயந்திரம், கார், கே.சி.பி உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே தப்பியோடி தலைமறைவான விசிக நிர்வாகி செல்வம் உள்ளிட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் காரணமாக, விசிக நிர்வாகி செல்வம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, கட்சி பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த செல்வம், கர்நாடக மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற போலீசார் விசிக முன்னாள் நிர்வாகி செல்வம் மற்றும் அவரின் கூட்டாளிகள் 4 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் தமிழகத்துக்கு அழைத்து வருகிறார்கள். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.