வேலூர்: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்து வருகிறது.
சுமார் 50 சதவீதம் அளவிற்கு வரி விதித்துள்ளது.இந்த வரி விதிப்பால் ஏராளமான தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஷூ மற்றும் தோல் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா? என தொழில் நிறுவனங்கள் தீவிர ஆலோசனை செய்து வருகின்றன. இது மட்டும் சாத்தியமானால் பாதிப்புகள் மிக குறைவாவே இருக்கும் என்பதால் இந்த முயற்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு பரஸ்பரம் வரியாக 25 சதவீதம் விதித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.இந்த வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் 50 சதவீதம் அளவிற்கு வரி விதிப்பிற்கு ஆளாகி உள்ளார்கள். இதனால் ஜவுளி, கடல் உணவு, தோல் பொருட்கள், வைரம், தங்க நகை ஏற்றுமதி, என்ஜினிரியங் உதிரி பாகங்கள் உள்பட பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளன. வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவே மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருக்கிறது. திடீரென மாற்று சந்தையை தேடுவது எளிதானது அல்ல.. அதற்கு காலங்கள் ஆகும். தற்போதைய நிலையில், தொழில் முடக்கம் ஏற்படுவதை தடுக்க மத்திய அரசு, அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது ஒருபுறம் எனில், தற்காலிக தீர்வாக ஷூ மற்றும் தோல் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியுமா? என தொழில் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இதுதொடர்பாக ஆம்பூரை சேர்ந்த தொழில் நிறுவனத்தினர் சிலர் கூறும் போது, கோவிட் பாதிப்பு , ஜி.எஸ்.டி. வரி போன்ற காரணங்களால் ஷூ, தோல் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு காரணமாக இந்த தொழில் தற்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து பொருட்களை வாங்கி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தாலும், விலை அதிகரிப்பு காரணமாக அங்கு உள்ள பொதுமக்கள் ஷூ மற்றும் தோல் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
அமெரிக்கர்கள் சிந்தட்டிக் ஷூக்கள் வாங்க தற்போது ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்கள். இவை விலை குறைவு மற்றும் தேவைப்படும்போது மட்டும் வாங்கி கொள்ளலாம் என நினைக்க தொடங்கிவிட்டார்கள். தற்போதைய நிலையில் தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இதுமாதிரியான பொருட்களை இறக்குமதி செய்ய தொடங்கி உள்ளன.
எனவே இந்தியாவில் உள்ள ஷூ மற்றும் தோல் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பலாமா என இங்குள்ள தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதில் இலங்கையில் இருந்து பொருட்களை அனுப்பினால், கன்டெய்னர் கட்டணம், ஊழியர்களுக்கான பணம், போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் லாபம் கிடைக்குமா? என இங்கு உள்ள ஷூ மற்றும் தோல் தொழில் நிறுவனங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷூ மற்றும் தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷூ மற்றும் தோல் தொழிலை பாதுகாக்க வரிவிலக்கு அளிக்க வேண்டும். அமெரிக்க அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது.