போகும் இடங்களில் எல்லாம் எங்களை அடித்து துவம்சம் செய்கிறார்கள்… போலீஸ் பாதுகாப்பு வேணும்.. எடப்பாடி ஆதரவாளர்கள் வேண்டுகோள்.!

போகும் இடங்களில் எல்லாம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடித்து துவம்சம் செய்வதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்து இருக்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் நிலையில், இந்த பொதுக்குழுவில் எப்படியாவது, தான் பொதுச் செயலாளர் ஆகிவிட வேண்டும் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் திடீரென்று அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற பிரச்சனையை முன்னெடுக்க, இதனால் ஆவேசமடைந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களை கடுமையாக அர்ச்சித்து வருகின்றனர்.

ஒற்றைத்தலைமை விவகாரத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும் ஜெயக்குமாரை, ‘கட்சிக்கு துரோகம் செய்தவனே..’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக அர்ச்சித்து வருகிறார்கள் . அதேபோல் ஓபிஎஸ் வீட்டிற்கு சமாதானம் பேச சென்ற அதிமுக சீனியர்களையும் ரவுண்டு கட்டி நின்று, ‘இனிமேல் எங்க ஐயாவ பார்க்க வராதீர்கள். சமாதானப்படுத்த வராதீர்கள் . சமாதானப்படுத்தி சமாதானப்படுத்தியே அவரை உட்கார வச்சிட்டீங்க’ என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார்கள்.

நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சேலத்துக்கு சென்றுவிட்ட நிலையில் பன்னீர்செல்வம் அவரது வீட்டில் இருந்த நிலையில், தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் கூடி இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளனர். இதை தெரிந்துகொண்ட பன்னீர்செல்வம் அங்கு விரைந்து வர, அதற்குள் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர்களாக ஜெயக்குமாரும், சிவி சண்முகமும் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேற, அதற்குள் அங்கு குவிந்துவிட்ட பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவர்களை சென்னை பாஷையில் கடுமையாக அர்ச்சித்தனர்.

காரில் ஏறி எஸ்கேப் ஆக முற்பட்டபோது காரை அடித்து முழக்கம் எழுப்பினர். இதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் அங்கிருந்து சென்றார்கள். இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக பகுதி செயலாளர் பாலச்சந்திரன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் மனுவில் , அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து விட்டு வெளியே வந்த நிர்வாகிகள் மீதும் அவர்களின் கார்களின் மீதும், வேனில் வந்திறங்கிய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். தலைமை நிர்வாகிகளை ஆபாசமான வார்த்தைகளால் பேசி உள்ளனர். அதனால் தலைமை அலுவலகத்துக்கும் எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.