பல ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய (EU) வர்த்தக பேச்சுவார்த்தையில் இப்போது ஒரு அதிரடி திருப்பம்.
ஐரோப்பிய வங்கிகள் இந்தியாவில் கால்பதிக்க அனுமதிப்பதில் இருந்த சிக்கல்களை இந்தியா தற்போது உடைத்தெறிந்து உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் 15 புதிய வங்கி கிளைகளை தொடங்க இந்தியா கிரீன் சிக்னல் காட்டியுள்ளது. இது வெறும் வங்கி அனுமதி மட்டுமல்ல, ஐரோப்பியச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான வரிச் சலுகையை பெறுவதற்கான ஒரு தந்திரமான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சிவப்பு கம்பள வரவேற்பு மூலம், ஐரோப்பிய முதலீடுகள் இந்தியாவுக்குள் அதிகரிக்குமா அல்லது உள்நாட்டு வங்கிகளுக்கு போட்டி அதிகரிக்குமா?
ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த வங்கிகள், இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 15 கிளைகளைத் திறக்க இந்தியா அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு முன்பு வழங்கப்பட்ட 12 கிளைகள் என்ற வரம்பிலிருந்து இது சற்று அதிகமாகும்.
இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 100% என நிலை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு பதிலாக ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் மற்றும் தொழில்முறை வல்லுனர்களுக்கு மிகவும் நிலையான விசா நடைமுறையை வழங்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளது.
வங்கித் துறையில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பானது 74% ஆகவும் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய வங்கிகள் இந்திய வங்கிகளில் அதிக முதலீடு செய்யவும், அதன் மூலம் மூலதனத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யும்.இந்த சலுகைகள், இந்தியாவின் வளர்ந்து வரும் நிதிச் சேவை சந்தையில் ஐரோப்பிய ஒன்றிய நிதி சேவை நிறுவனங்களுக்கு ஒரு வலுவான போட்டி நிலையை உருவாக்குகிறது.
அதே வேளையில், தனது விரிவான மூலோபாய இலக்குகளுக்கு ஏற்ப, படிப்படியாக சந்தையை தாராளமயமாக்குவதில் இந்தியா கொண்டுள்ள உறுதியையும் இது காட்டுகிறது.அதே சமயம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமயமாக்கப்பட்ட சலுகைகள், இந்திய நிதி சேவை நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த அனுமதிக்கும். இது இந்தியாவின் நிதி சேவை ஏற்றுமதியை வலுப்படுத்துவதுடன், இத்துறையில் நிலையான மற்றும் முற்போக்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வர்த்தக வளர்ச்சி?இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான மொத்த சேவைகள் வர்த்தகம் 2024-ம் ஆண்டில் சுமார் 83 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்த இந்தியா-EU சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது. ஏற்கனவே 2024-ல் இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி சேவைகளை ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதிச் சேவைகளை இறக்குமதி செய்துள்ளது. இதனிடையே இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு ஒத்துழைப்பை விரைவுபடுத்தவும், சந்தை அணுகுமுறையை எளிதாக்கவும் மற்றும் நிதி ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் தேவையான நிறுவன மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வழங்கும். மொத்தத்தில் இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கு இடையிலான வணிக உறவை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.









