சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ” நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்..
நான் டெல்லி சென்று வந்த பிறகு பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் முன்வைக்கப்பட்டுகின்றன.. திரு ஸ்டாலின் அடிக்கடி என்னை விமர்சனம் செய்து வருகிறார்.. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.. எதிர்க்கட்சியாக இருந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ ஆளுங்கட்சியாக இருக்கும் போது அவர்களுக்கு ரத்தின கம்பள வரவேற்பு அளித்தனர்..
ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு.. எதிர்க்கட்சியாக இருக்கும் போது பிரதமருக்கு கருப்புக் கொடி.. ஆளுங்கட்சியாக இருக்கும் போது பிரதமருக்கு வெள்ளைக்குடை பிடித்தனர்..
நான் உள்துறை அமைச்சரை சந்திக்கிறேன் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்திவிட்டேன்.. அதனடிப்படையில் 16-ம் தேதி இரவு அமித்ஷாவை நான் சந்திக்க சென்றேன்.. அவரை சந்திக்கும் போது கால நேரம் அதிகமானதால், என்னுடன் வந்தவர்களை முதலில் அனுப்பி விட்டேன்.. அமித்ஷாவை சந்திக்கும் போது அரசாங்க காரில் சென்று அவரை சந்தித்தோம்.. என்னுடன் வந்தவர்கள் சென்ற பிறகு நான் மட்டும் அமித்ஷாவுடன் 10 நிமிடம் தனியாக பேசினேன்.
அமித்ஷா வீட்டில் இருந்து புறப்பட்ட பின்னர் காரில் என் கர்சீப்பை வைத்து முகத்தை துடைத்தேன்.. அதை வைத்து அரசியல் செய்வது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது.. தமிழ்நாட்டு பத்திரிகைகளும் ஊடகங்களும் இப்படி தரம் தாழ்ந்து வெளியிடுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்.. நான் முகத்தை துடைத்தில் என்ன அரசியல் இருக்கிறது.. அதை ஒரு வீடியோ எடுத்து வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியிடுவது எப்படி சரியாக இருக்கும்.. இது வருத்தத்திற்கு உரியது.. ஒரு தலைவரை அவமதிக்கும் வகையில் திட்டமிட்டு அவதூறு பரப்புவது சரியல்ல.
முகத்தை மறைத்து வெளியே செல்ல என்ன காரணம் என்று முதல்வர் பேசியிருக்கிறார்.. இதற்கு என்ன இருக்கப் போகிறது..? என்னை பற்றி பேச வேறு எதுவும் இல்லாததால் என்னை பற்றி முதல்வர் பேசுகிறார்.. இது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. என் முகத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. அதிமுகவை விமர்சிக்க திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.. ” என்று தெரிவித்தார்..