அதிமுக அலுவலக சாவியை கைப்பற்றிய இபிஎஸ்… எடப்பாடிக்கு உதவிய முக்கிய வாதம்!

சென்னை: அதிமுக அலுவலகத்தின் சீலை நீக்கி அதன் சாவிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து, தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த சீல் உத்தரவை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 15ம் தேதி வரை நடைபெற்றது.

நீதிபதி சதீஷ்குமார் முன் வழக்கு விசாரிக்கப்பட்டது. முதலில், 11ம் தேதி நடந்த கலவரங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் அதிமுக அலுவலகம் முன் நடந்த கலவரம் குறித்த வீடியோவை நீதிபதி பார்வையிட்டார். அதன்பின் கேள்வி எழுப்பிய நீதிபதி, அதிமுக அலுவலகம் உள்ளே கூட்டம் இருந்தது போலீசுக்கு தெரியுமா? கலவரத்தை தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

போலீஸ் ஏன் கலவரத்தை தடுக்காமல் அமைதியாக இருந்தது. ஏன் இவர்களை கலைக்கவில்லை. வீடியோவை பார்த்தால் போலீஸ் தலையிட்டது போல தெரியவில்லை, என்று கேள்வி எழுப்பினார். இதற்கு போலீஸ் தரப்பு அளித்த பதிலில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இரண்டு பக்கமும்கூடிய கூட்டத்தை தடுக்க முயன்றோம். ஆனால் அதை மீறி கலவரம் செய்தனர். கலவரத்தை நாங்கள் தடுத்தோம், போலீஸ் தடுக்கவில்லை என்றால் பலர் பலியாகி இருப்பார்கள். நாங்கள் தடுத்த காரணத்தால்தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்களுக்கு காயம் ஏற்படவில்லை, என்று கூறியது.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வைத்த வாதம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எடப்பாடி தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வைத்த வாதம் பின்வருமாறு, வீடியோவை பார்த்தாலே போலீஸ் சரியாக செயல்படவில்லை என்று தெரியும். போலீஸ் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று தெரியும். நாங்கள் அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு இருந்தோம். ஆனால் நாங்கள் கேட்ட பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.

முன்னதாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வாதத்திலேயே, எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக அலுவலகத்தின் செயலாளர் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இங்கு இரண்டு முக்கியமான எடுத்துக்காட்டுகளை கூற விரும்புகிறேன். அங்கு கலவரம் நடந்த அன்று, அலுவலகம் யார் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது என்று பார்க்க வேண்டும். விதிப்படி அன்று எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக அலுவலகத்தின் செயலாளர். அவருக்குதான் அலுவலகம் மீதான உரிமை உள்ளது. (முக்கியமான வாதம்)

ஆனால் அதை மீறி ஓபிஎஸ் தரப்பு பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பைல்களை எடுத்து சென்றுள்ளனர். சட்டப்படி எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக அலுவலகத்தின் செயலாளர் என்பதால் அவரிடம் அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும், என்று எடப்பாடி தரப்பு கூறியது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த எதிர் வாதத்தில், பொதுக்குழு அன்று கட்சி அலுவலகத்தை மூட கூடாது. பொதுக்குழுவிற்கு பல மாவட்டங்களில் இருந்து ஆட்கள் வருவது வழக்கம்.

ஓ பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கு சென்றதில் எந்த தவறும் இல்லை. ஆனால் 4 மாவட்ட செயலாளர்கள் யாரையும் உள்ளே விடாமல் தடுத்தனர். 200-3000 ஆட்களை நிறுத்தி அலுவலகம் வந்தவர்களை தடுத்தனர். உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதற்கான வீடியோவை நீங்களே பார்க்கலாம். ஓ பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகம் செல்ல கூடாது என்று விதி இருக்கிறதா? அப்படி இருக்கும் போது அவர் அலுவலகம் சென்றதில் என்ன தவறு? என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு கூறியது.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.. பொதுக்குழு நடத்த அனுமதி கொடுக்கப்பட்ட பின் ஏன் அதிமுக அலுவலகத்தில் கூடினீர்கள். ஓபிஎஸ் தரப்பு நாங்கள் அந்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல இருக்கிறோம் என்று வாதம் வைத்தார். இந்த வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அனுமதிக்க கூடாது, அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.