தமிழகத்தின் மான்செஸ்டர் எனப்படும் கோயம்புத்தூர், எப்போதும் சொகுசு கார்களின் புகலிடமாக இருந்து வருகிறது. கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு வாகனம், அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.

உலகப் புகழ்பெற்ற எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான ‘ டெஸ்லா சைபர் டிரக்’ (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் விண்வெளி ஓடம் போன்று வலம் வந்தது. வித்தியாசமான வடிவமும், துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் ஆன கட்டமைப்பும் கொண்ட அந்த காரின் விலை 5 கோடி.
இந்தியாவில் முறையாக பதிவு செய்யப்பட்டு, சமீபத்தில் சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் தென்பட்ட இந்த ‘எலக்ட்ரிக் பீஸ்ட்’, இப்போது கோவை மக்களின் கண்களுக்கும் விருந்தளிக்க தொடங்கியுள்ளது.

சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வாகனம், துப்பாக்கித் தோட்டாக்களையே தாங்கும் வல்லமை கொண்டது என்பது கூடுதல் அம்சம்.கோவையின் அவினாசி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இந்த வாகனம் தென்பட்ட போது, கார் பிரியர்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படும் இந்த சைபர் டிரக், கோயம்புத்தூர் போன்ற ஒரு தொழில் நகரத்தின் சாலைகளில் வலம் வருவது, நகரை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் காட்டுவதாக இளைஞர்கள் உற்சாகத்துடன் கமெண்ட் செய்தனர்.





