‘கோல்ட்ரிப்’ உரிமையாளர், சென்னை மருந்து ஆய்வாளர் வீடுகளில் ED அதிரடி ரெய்டு..!!

சென்னை: கோல்ட்ரிப் இருமல் மருந்தால் குழந்தைகள் 20 பேர் பலியான நிலையில் கைதான நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே ஸ்ரீசன் எனும் மருந்து நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் இருந்து கோல்ட்ரிப் எனும் மருந்து தயார் செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த மருந்தை அங்கிருந்த மருத்துவர்களும் குழந்தைகளுக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்த மருந்தை சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு உள்ளுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துவிட்டனர்.

இதையடுத்து மத்திய பிரதேச மாநில அரசு, தமிழக அரசுக்கு தகவல் கொடுத்தது. இது தொடர்பாக ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் “டை எத்திலீன் கிளைக்கால்” என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம் கூட இருக்கக் கூடாது. ஆனால், 48 சதவிகிதம் வரை கலந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு நோட்டீஸ் கொடுக்க சென்ற போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மருந்து நிறுவனத்தை பூட்டிய அதிகாரிகள் அந்த நோட்டீஸை அங்கு ஒட்டினர். பிறகு பதுங்கியிருந்த ரங்கநாதனை கைது செய்தனர். அவர் மத்திய பிரதேச மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்டோபர் 1ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் இறந்ததும் மருந்து நிறுவனம் தமிழகத்தில் இருப்பதால் அந்த மாநில சுகாதாரத் துறை தகவல் சொன்னார்கள்.

உடனே தமிழக அரசும் அந்த நிறுவன மருந்தை ஆய்வு செய்து அதில் நச்சுத்தன்மை இருப்பதை கண்டறிந்து மத்திய பிரதேச அரசுக்கும் மத்திய சுகாதாரத் துறைக்கும், ஒடிஸா, புதுவை போன்ற மாநிலங்களுக்கும் இந்த மருந்தில் நச்சுத்தன்மை இருப்பது குறித்து தகவல் சொன்னோம்.

ஆனால் மத்திய பிரதேச அரசும், மத்திய அரசும், அந்த கோல்ட்ரிஃப் மருந்தில் தவறு இல்லை என கூறி விட்டுவிட்டார்கள். ஆனால் நாம், இந்த மருந்தில் எந்த அளவிற்கு நச்சுத்தன்மை இருக்கிறது என்பதை உறுதி செய்துவிட்டு அக்டோபர் 3ஆம் தேதி முதல் அதன் தயாரிப்பை நிறுத்தும் உத்தரவை கொடுத்துவிட்டோம்.

இந்த மருந்தின் தரத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஏன் போய் ஆய்வு செய்யவில்லை என விளக்கம் கேட்டு இரு மருந்து ஆய்வாளர்கள் (Drug Inspectors) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு இந்த மருந்துகளை வாங்குவதில்லை. தனியார் மருத்துவமனைகளும் இந்த மருந்துகளை வாங்க வேண்டாம் என தடை விதித்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதனின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர் முறையாக ஆய்வு செய்யாததால் தமிழக அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அது போல் டிஎம்எஸ் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணை இயக்குநர் கார்த்திகேயனின் அண்ணாநகர் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்படுகிறது. இவர் டிஎம்எஸ் அலுவலகத்தில் ரூ 25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில் இவரது வீட்டில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.