E-Filing வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்!

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

நீதிமன்றங்களில் இ பைலிங் முறை அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இ பைலிங் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவையிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு தீர்மானத்தின் படி, இ பைலிங் முறையை கண்டித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, E filing முறையில் என்னென்ன சிக்கல் உள்ளது, இந்த முறை கொண்டு வரப்பட்டால் வழக்கறிஞர்கள், வழக்காடி களுக்கு என்னென்ன சிரமங்கள் ஏற்படும், அதனை நடைமுறைபடுத்தும் முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.இது குறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், இந்த இ பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்தனர். மேலும் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் இருந்தால்தான் இந்த நடைமுறையை செயல்படுத்த முடியும் எனவும், வழக்கறிஞர்கள் இந்த முறையை வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.