கள்ளக்காதலி மகளுக்காக முதியவர் வெறிச்செயல், பசுபதி பாண்டியன் கூட்டாளிக்கு வலை
கோவை: மது, இறைச்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து துபாய் டிராவல்ஸ் அதிபர் கோவையில் கொலை செய்யப்பட்டார்.
கள்ளக்காதலியின் மகளுக்காக முதியவர், பசுபதி பாண்டியன் கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. தூத்துக்குடியை சேர்ந்தவர் தியாகராஜன் (69). கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் தனது மனைவியை பிரிந்து கோவை பீளமேடு காந்திமா நகர் பகுதிக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
கோமதிக்கு நிலா மற்றும் சாரதா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். சாரதாவிற்கு குணவேல் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை தியாகராஜனிடம் சாரதா தெரிவித்துள்ளார். இதையடுத்து குணவேலை அழைத்து தியாகராஜன் கண்டித்தபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தியாகராஜன் ஆத்திரம் அடைந்து, குணவேலை சரமாரியாக தாக்கி கொலை செய்தார். அந்த வழக்கில் தியாகராஜன் கடந்த 2016ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
அதை எதிர்த்து தியாகராஜன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே சாரதா துபாய்க்கு வேலைக்கு சென்றார். அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டிராவல்ஸ் நடத்தி வந்த சிகாமணி (47) என்பவர் சாரதாவுக்கு அறிமுகமாகி உள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த பழக்கத்தில் சிகாமணிக்கு சாரதா ரூ.6 லட்சம் கொடுத்துள்ளார். அதனை சாரதா திருப்பி கேட்டபோது சிகாமணி தானும் அதிகளவில் செலவு செய்திருப்பதால் அந்த பணத்தை திருப்பி தரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சாரதா கோவைக்கு திரும்பினார். தனது வீட்டில் சிகாமணியுடனான பழக்கத்தை கூறிய அவர் பணத்தை திருப்பி தராததை தெரிவித்துள்ளார். சாரதா கோவைக்கு சென்றது சிகாமணிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் சாரதாவை சமாதானம் செய்வதற்காக கடந்த மாதம் 21ம் தேதி கோவைக்கு வந்தார். அவரை சாரதா தனது குடும்பத்துடன் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார். ஆனால் பணத்தை திருப்பி தராத ஆத்திரத்தில் சாரதாவும், அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.
எனவே கோவைக்கு வந்த சிகாமணியை தங்கள் வீட்டில் தங்க வைத்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதற்கான திட்டத்தை தியாகராஜன் வகுத்தார். நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி குட்டி தங்கம் என்கிற புதியவன் என்பவரையும் கோவைக்கு வரவழைத்தார். கொலை திட்டத்தின்படி சாரதா குடும்பத்தினர் சிகாமணியை தடபுடலாக கவனித்தனர். கடந்த மாதம் 22ம் தேதி இரவு மது குடிப்பதற்காக சிகாமணியை அழைத்துள்ளனர். தொடர்ந்து தியாகராஜன், புதியவனுடன் சேர்ந்து சிகாமணி மது குடித்தார்.
அப்போது மது மற்றும் இறைச்சியில் 30க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து சிகாமணிக்கு கொடுத்தனர். சிறிது நேரத்தில் சிகாமணி மயங்கி விழுந்து இறந்தார். இதைத்தொடர்ந்து தியாகராஜன், புதியவன், சாரதா ஆகியோர் சிகாமணியின் உடலை கார் டிக்கியில் ஏற்றி கரூர் பொன்னமராவதி பகுதிக்கு சென்றனர். அங்கு நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசினர். பின்னர் அங்கிருந்து திருச்சிக்கு சென்றனர். சாரதாவை விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சியில் இருந்து புதியவன் நெல்லைக்கும், தியாகராஜன் கோவைக்கும் திரும்பினர். இந்நிலையில் சிகாமணியின் மனைவி பிரியா கணவரை தொடர்பு கொள்ள முயன்று முடியாததால் துபாயில் உள்ள அலுவலகத்திற்கு போன் செய்து விசாரித்தார். அப்போது சிகாமணி கோவைக்கு சென்று இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். பிரியா கோவைக்கு வந்து பீளமேடு போலீசில் சிகாமணி மாயமாகிவிட்டதாக புகார் அளித்தார்.
இதற்கிடையே சிகாமணியின் உடலை கைப்பற்றிய கரூர் பொன்னமராவதி போலீசார் அடையாளம் தெரியாத உடல் என வழக்குப்பதிந்து அடக்கம் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருவதை அறிந்த தியாகராஜன் கோவை கோர்ட்டில் சரணடைந்தார். சிகாமணி கொலை செய்யப்பட்டதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சரணடைந்த தியாகராஜனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு உடந்தையாக இருந்த சாரதா, ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி புதியவன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* இறந்த பின்னரும் தாக்கிய கள்ளக்காதலி
சிகாமணி தனது பணத்தை திரும்ப தராததால் ஆத்திரத்தில் இருந்த சாரதா திட்டம்போட்டு உறவினர்களுடன் சேர்ந்து தூக்க மாத்திரை கொடுத்து கொன்றார். இறந்தபின்னரும் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சாரதா, சரமாரியாக தாக்கி இருக்கிறார். துபாய்க்கு சென்றுள்ள சாரதாவை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.