32 மணி நேரம் டிராபிக்… ஹெலிகாப்டர் பிடித்து வீட்டிற்கு போன டாக்டர் சுதிர் மேத்தா.!!

மும்பை: மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் எதிர்பாராத விதமாக 16 கிமீ தூரத்திற்கு டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் சுமார் 32 மணி நேரம் வரை சாலையிலேயே சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த டிராபிக் பாதிப்பின்போது தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் அதில் இருந்து தப்பி, புனே சென்றது டிரெண்டாகி வருகிறது.

நமது நாட்டில் டிராபிக் பாதிப்பு ஏற்படுவது வாடிக்கை தான். இவை பொதுவாகக் கொஞ்ச நேரம் தான் நீடிக்கும். ஆனால், சில நேரங்களில் டிராபிக் பாதிப்பு கைமீறிப் போய்விடும். மணிக் கணக்கில் கூட டிராபிக்கில் சிக்கும் சூழல் ஏற்படும். அப்படியொரு மிக மோசமான டிராபிக் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள மும்பை- புனே விரைவுச்சாலையில் திடீரெனக் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள காண்டாலா மலைப்பாதையில் உள்ள அடோஷி சுரங்கப்பாதை அருகே எளிதில் தீப்பற்றக்கூடிய புரொபிலீன் வாயுவை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும்.பாதுகாப்பு கருதி டேங்கரில் இருந்த வாயுவை வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றும் வரை அந்தச் சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் புனே- மும்பை சாலையில் டிராபிக் பாதிப்பு மீண்டது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.06 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. கொச்சியில் இருந்து சூரத் நோக்கி புரொபிலீன் வாயுவை ஏற்றிச் சென்ற ஒரு டேங்கர் லாரி, கீழே இறங்கும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து, அடோஷி கிராமம் அருகே கவிழ்ந்தது.

தீப்பற்றும் அபாயம் அதிகம் இருந்ததால், அதிகாரிகள் உடனடியாக அங்கு டிராபிக்கை முழுமையாக நிறுத்தி, பாதிக்கப்பட்ட பகுதியைத் தனிமைப்படுத்தினர். இதனால் இரு மார்க்கத்திலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பயணிகள் பல மணி நேரம் சாலையிலேயே சிக்கித் தவித்தனர். இந்த விபத்தால் ஏற்பட்ட டிராபிக் புனே ரூட்டில் காலப்பூர் சுங்கச்சாவடி வரை நீண்டது. மும்பை ரூட்டில் 16 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.டேங்கர் லாரியில் இருந்த வாயு மாற்றப்பட்ட பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், டிராபிக் நெரிசலில் சிக்கிய பயணிகள், தண்ணீர், உணவு இல்லாமல் சுமார் 32 மணி நேரம் வரை தவிக்கும் சூழல் ஏற்பட்டது. அதன் பிறகே நெரிசல் படிப்படியாகச் சரிசெய்யப்பட்டதாக அதிகாரிகள் விளக்கினர். பல்வேறு முக்கியப் பகுதிகளில் போலீசார் கண்காணிப்புப் பணிகள் காரணமாக டிராபிக் குறைந்துள்ளது.

அதேநேரம் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விடக் குறைவாகவே இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். நீண்ட டிராபிக் காரணமாகப் பல பயணிகள் தங்கள் பயணங்களை ஒத்திவைத்தனர் அல்லது திட்டங்களை மாற்றியமைத்துக் கொண்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த டிராபிக்கில் சிக்கிய தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேறிய போட்டோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

EKA மொபிலிட்டி மற்றும் பின்னகிள் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சுதிர் மேத்தா புனேவுக்கு இந்த எக்ஸ்பிரஸ் வே மூலம் செல்லும்போது டிராபிக்கில் மாட்டிக் கொண்டார். சுமார் 8 மணி நேரம் அவர் டிராபிக்கில் சிக்கிய நிலையில், பிறகு ஹெலிகாப்டர் புக் செய்து அதன் மூலம் வெளியேறி இருக்கிறார். இது தொடர்பான போட்டோ, வீடியோக்களை அவரே தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மேலும், போக்குவரத்து நெரிசல் போட்டோக்களை ஹெலிகாப்டரில் இருந்து எடுத்தும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், உடனடி உள்கட்டமைப்பு மேம்பாடுகளைத் தேவை என வலியுறுத்தினார். இது எக்ஸ்பிரஸ் வே என்பதால் ஒட்டுமொத்தச் சாலையிலும் ஓரிரு இடங்களில் மட்டுமே உள்ளே நுழையவும் வெளியேறவும் வழி இருக்கும். ஆனால், இதுபோன்ற சூழல்களைச் சமாளிக்க அவசரக்கால வெளியேறும் வழிகள் மற்றும் ஹெலிபேட்களை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும், “ஒரு டேங்கர் லாரிக்காக மும்பை புனே விரைவுச்சாலையில் லட்சக்கணக்கானோர் கடந்த 20+ மணி நேரமாகச் சிக்கித் தவிக்கின்றனர். இதுபோன்ற எமர்ஜென்சி சூழல்களில், வாகனங்கள் பத்திரமாகச் செல்ல வசதியாக, விரைவுச்சாலையின் பல்வேறு இடங்களில் வெளியேறும் வழிகளைத் திட்டமிட வேண்டும். ஹெலிபேட்கள் அமைக்க 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே செலவாகும்; மேலும், ஒரு ஏக்கருக்கும் குறைவான திறந்தவெளிப் பகுதியே போதும். அவசரக்காலத்தில் இது நமக்கு உதவும்” எனப் பதிவிட்டுள்ளார்.சுமார் 32 மணி நேரம் வரை இந்த டிராபிக் பாதிப்பால் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த டிராபிக் தொடர்பான போட்டோ, வீடியோ ஒரு பக்கம் டிரெண்டான நிலையில், அதேபோல இந்தத் தொழிலதிபரின் ஹெலிகாப்டர் எஸ்கேப்பும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.