FASTag இல்லாத வாகனங்களுக்கு 2 மடங்கு அபராதம்..

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து 5% முதல் 7% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் ஜீப்கள் ஒரு முறை பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. பேருந்துகள் மற்றும் லாரிகள் வாகனத்தின் அளவைப் பொறுத்து ரூ.15 முதல் ரூ.50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். பெரிய கனரக வாகனங்கள் தற்போதைய கட்டணத்திலிருந்து ₹100 முதல் ₹200 வரை கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிக வாகனங்கள் செல்லும் சென்னை – பெங்களூரு, சென்னை – திருச்சி, மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளான பரனூர், ஸ்ரீபெரும்புதூர், வானகரம், கிருஷ்ணகிரி, சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் இந்தக் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள நெமிலி மற்றும் சென்னாசமுத்திரம் சுங்கச்சாவடிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் முழுமையடையாததால், அங்கு மட்டும் கட்டண உயர்வு தற்போது கிடையாது.

மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் இனி தங்களது சுங்கக் கட்டணத்தை FASTag அல்லது UPI (QR Code) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். ரொக்கப் பணம் செலுத்தும் பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், வாகனங்கள் விரைவாகச் செல்லவும் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் FASTag-ல் போதிய பேலன்ஸ்  இல்லை என்றால், அங்கேயே வழங்கப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆகவே வாகன ஓட்டிகள் தங்கள் FASTag கணக்கில் போதிய தொகையை முன்கூட்டியே வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது UPI வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயார் நிலையில் வைத்திருப்பதும் அவசியமாகும். உங்கள் வாகனத்தில் FASTag இல்லையென்றால் அல்லது அது செயல்படவில்லை என்றால், நீங்கள் 2 மடங்கு அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.