இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின்’ கீழ் இலவசத் தொழில் பயிற்சிகளையும், மாதந்தோறும் 1,200 ரூபாய் உதவித்தொகையையும் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் 60% மற்றும் மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை நீங்கலாக தமிழகத்தின் 37 மாவட்டங்களைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் கீழ் ட்ரோன் ஆபரேட்டர், மொபைல் போன் டெக்னீஷியன், செவிலியர் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு (AI), சாப்ட்வேர் டெக்னாலஜி மற்றும் வெல்டிங் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளில் 40 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சுமார் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை நடைபெறும் இப்பயிற்சிக் காலத்தில், மாணவர்களுக்குத் தேவையான சீருடை, பாடப்புத்தகங்கள், தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், அடிப்படை ஆங்கில அறிவு மற்றும் ஆளுமைத் திறன் போன்ற மென்திறன் பயிற்சிகளும் இதில் அடங்கும்.

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் இளைஞர்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு, தகுதியுள்ள 50% நபர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், 20% நபர்களுக்குச் சுயதொழில் தொடங்கத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பயிற்சியை முடித்து பணியில் சேரும் இளைஞர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தலா ரூ.1,270 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பாகும். சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் இணைய விருப்பமுள்ள இளைஞர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 155330 என்ற வாழ்வாதார உதவி அழைப்பு எண்ணைப் பயன்படுத்தலாம். தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு, கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையை போக்கி, அவர்களைத் தொழில்முறைத் திறனாளர்களாக மாற்றும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.