நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள்.
அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க பேருந்து மற்றும் ரெயில்களில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
தீபாவளி பண்டிகைக்கு ரெயிலில் முன்பதிவு கடந்த ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 17-ம்தேதி) தொடங்கிய நிலையில் முன்பதிவு தொடங்கிய சில மணிநேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி விட்டது.
ரெயில் சொந்த ஊருக்கு செல்ல அக்டோபர் 16 மற்றும் 17-ம்தேதிக்கான முன்பதிவு முடிவடைந்த நிலையில், அக்டோபர் 18, 19, 20-ம்தேதிக்காக முன்பதிவு முறையே ஆகஸ்ட் 19, 20, 21-ம் தேதிகளில் நடைபெறும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊரில் இருந்து அக்டோபர் 21-ந்தேதி சென்னை திரும்ப வரும் 22-ந்தேதியும், அக்டோபர் 22, 23, 24, 25, 26-ம்தேதிகளில் சென்னை திரும்ப முறையே ஆகஸ்ட் 23, 24, 25, 26, 27-ம்தேதிகளில் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்கள், அரசு பேருந்து மூலம் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் தற்போது முன்பதிவு நடைபெற்று வருவதாகவும், கடைசி நேர நெரிசலை தவிர்க்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்படியும் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் வருடந்தோறும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கூடுதலாக பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கும், தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவும் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரெயில்களை போன்றே, அரசுப் பேருந்துகளிலும் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால், இந்தாண்டு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்டின் விலையை பல ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொள்ளை அடிக்க தொடங்கி விடுகின்றனர். இதனால் அரசு பேருந்துகளிலும், ரெயில்களிலும் டிக்கெட் கிடைக்காமல் ஆம்னி பேருந்துகளில் அதிக விலை கொடுத்து சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதேபோல் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், டிக்கெட் கிடைக்காதவர்கள் காலம் தாழ்த்தாமல் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என்றும் அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு தீபாவளிக்கு ஐந்து லட்சத்து 76 ஆயிரம் பேர் அரசுப் பேருந்துகளில், பயணித்த நிலையில் இந்தாண்டு அதற்கும் அதிகமாகவே பயணிகள் பயணிக்க வாய்ப்புள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்