‘சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: ‘சேலம் மாவட்டம் பாமக-வின் கோட்டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்எல்ஏ-க்களைப் பெற்றது.கடந்த சில வாரங்களாக சில சூழல்கள் நிலவிக் கொண்டு இருக்கிறது. என்மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவை அனைத்தும் 100 சதவீதம் பொய்யானவை. அவை குறித்து சில நாட்களில் தெரியப்படுத்துகிறேன். கட்சிக்காகவும், சமுதாயத்துக்காகவும் சுமைகளை, அமைதியாக சுமந்து கொண்டு இருக்கிறேன்.அண்மையில் நாம் நடத்திய சித்திரை முழு நிலவு மாநாட்டை இந்தியாவே திரும்பி பார்த்துள்ளது. மற்ற கட்சிகள் ஆச்சரியத்தோடு பார்த்தன. ஆனால், திமுக பயத்தோடு பார்த்தது. வரப்போகும் தேர்தலில் வன்னியர் சமுதாயத்தினர் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி 4 ஆண்டுகளாக நம்பவைத்து கழுத்தறுத்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.கர்நாடகா, தெலங்கானா, பிஹார் போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டன. ஆனால், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை, சட்டம் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். துரோகம் செய்துவிட்ட திமுகவுக்கு பாடம் புகட்டுவோம்.கடந்த தேர்தலில், சேலம் மாவட்டத்தில் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வரப்போகும் தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது. தருமபுரியில் ஒரு இடத்தில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதுபோல சேலத்திலும் நடக்க வேண்டும். திமுகவின் ஊழல் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சி அகற்றப்பட வேண்டும். கட்சியில் நிலவும் குழப்பங்களை நான் பார்த்துக் கொள்கிறேன், களத்தில் நீங்கள் தைரியமாக இருங்கள்.தேர்தலின்போது திமுக 510 வாக்குறுதிகளை அளித்தது, அதில் 60 – 70 மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளது. நீட் விலக்கு, சமையல் எரிவாயு மானியம், மாதந்தோறும் மின் கணக்கீடு என பலவற்றை திமுக நிறைவேற்றவில்லை. திமுக அமைச்சர்கள் பயங்கரமான திறமை வாய்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் 3, 4 துறைகள். அதிலும் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு 3 இலாக்காக்கள் கொடுத்தனர். சிந்தனையாளர் , பொருளாதார மேதை பிடிஆர் தியாகராஜனுக்கு ஒரு இலாகாதான்.டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணம் தொடங்குகிறேன். மக்களின் உரிமைகளை மீட்க நடை பயணம் என்றாலும், திமுக ஆட்சியை அகற்றுவதுதான் நமது முதல் கடமை’ என்றார். அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கி வருகிறார். இந்தச் சூழலில், சேலம், தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பாமக பொதுக்குழு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், பென்னாகரம் எம்எல்ஏவும் பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி ஆகியோர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்தனர்.இதனை சேலம் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய அன்புமணி ராமதாஸ், ‘பாமகவைச் சேர்ந்த இரு எம்எல்ஏ-க்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அவர்கள் இருவரும் பூரண உடல்நலம், மனநலம் பெற நாம் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்’ என்றார். இந்தக் கூட்டத்தில், வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி உள்ளிட்ட சில நிர்வாகிகள் பேசும்போது, ‘தருமபுரியில் இருமுறை போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், வரப்போகும் தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும்’ என்றனர்.இதன்பின்னர் பேசிய அன்புமணி, ‘சேலம் மாவட்டம் எனக்கு பிடித்த மாவட்டம். இங்குதான் 10 ஆண்டுகள் இருந்தேன், படித்தேன். நான் பாமக கொடியை முதன்முதலில் ஏற்றியது சேலம் மேற்கு தொகுதியில்தான்’ என்றார். இதன்மூலம் சேலம் மேற்கு தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என பாமகவினரிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில், பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மேட்டூர் எம்எல்ஏ, சதாசிவம் உள்பட பாமகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
“சேலத்தில் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது” – அன்புமணி
