தீபாவளி பர்சஸ்… பரபரக்கும் கடை வீதிகள்… மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்..!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், பண்டிகையை கொண்டாட தேவையான பொருள்களை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

கடந்த சனி, ஞாயிறு நாள்களிலேயே சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, மதுரை நகரில் உள்ள கடைவீதிகளுக்கு அருகே உள்ள தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் பண்டிகைகாலத்தில் வருகை தேவையான பொருள்களை வாங்கி செல்வது வழக்கம். இதன்காரணமாக, கடந்த சில நாள்களாகவே மதுரையின் மேலமாசி வீதி, நேதாஜி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் மற்றும் மக்கள் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, இதை சமாளிக்கும் விதமாக மதுரையின் மாசி வீதிகளில் போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி, கே.பி.எஸ். சந்திப்பில் இருந்து நேதாஜி ரோடு மற்றும் ஜம்ஜம் சந்திப்பில் இருந்து மேலவடம்போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

இதுபோல, டி.எம். கோர்ட் சந்திப்பில் இருந்தும் கூடலழகர் பெருமாள் கோவில் சந்திப்பிலிருந்தும் எந்த ஒரு வாகனமும் மேலவடம்போக்கி தெரு வழியாக டி.பி.கே.ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

ஜான்சி ராணி பூங்கா முதல் முருகன் கோவில் வரை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலக்கோபுரத்தெரு, மேலஆவணிமூல வீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேராக நேதாஜி ரோடு முருகன் கோவில் செல்லாமல் மீனாட்சி பஸ் நிலையம், கான்சாமேட்டுத்தெரு, டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி வழியாக முருகன் கோவில் சந்திப்பு செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

பெருமாள் தெப்பம் சந்திப்பில் இருந்து எந்த ஒரு வாகனங்களும் நேதாஜி ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் ரோடு வழியாக செல்ல வேண்டும். நேதாஜி ரோட்டில் இருந்து பச்சை நாச்சியம்மன் கோவில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு வாகனங்கள் செல்லலாம்.

மேற்கண்ட மாற்றங்களுக்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.