கோவை : தொழில் நகரமான கோவையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அது போன்று ஒடிசா பீகார், அசாம் ,மேற்கு வங்காளம் உட்பட வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் . தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது இதனால் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இருக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள். தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அவர்கள் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.இதன் காரணமாக கோவையில் இருந்து சென்னை, நாகர்கோவில், நெல்லை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் குவிந்தது. குறிப்பாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்ய அதிக அளவில் திரண்டனர் .இதனால் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களை ரயிலில் ஏற அனுமதித்தினர். இருந்த போதிலும் பயணிகள் முண்டியடித்து ரயிலில் ஏறினர். குறிப்பாக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிற்க கூட முடியாத அளவில் இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டே பலர் சென்றனர்..
தீபாவளி பண்டிகை… கோவை ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்.!!
