இந்தியாவின் 25 சதவீத தங்க உலோகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டிலேயே மிகப்பெரிய தங்க சுரங்கம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..
ராஜஸ்தானில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதை மத்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து புவியியல் ஆய்வாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒவ்வொரு அங்குலமாக சென்று தங்கத்திற்கான இருப்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்தின காட்டோல் என்ற ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜக்பரியா மற்றும் பூகியா ஆகிய இரண்டு பகுதிகளில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் தங்கம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் விவசாயிகள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு சுரங்கம் வெட்டுவதற்கான பணிகள் தாமதமாகி வந்தன.
மேலும், தங்க சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணம் செலுத்துவதில் காலதாமதம் செய்ததால் அந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் ஒப்பந்த புள்ளிகள் புதிதாக கோரப்பட்டுள்ளன..
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம், காட்டோல் ஒன்றியத்தில் மீண்டும் ஒரு தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள கன்காரியா என்ற கிராமத்தில் மிகப்பெரிய அளவில் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புவியியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 3 கிலோ மீட்டர் சுற்றளவில், 940.26 ஹெக்டேர் பரப்பளவில் 113.52 மில்லியன் டன் அதாவது 11 கோடி டன் அளவுக்கு தங்க தாதுக்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அளவிற்கான தங்க தாதுக்கள் மூலம் 222 டன் அளவிலான தூய தங்கத்தை வெட்டி எடுக்க முடியும்.
ராஜஸ்தானில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தங்க சுரங்கங்களில் இதுவே அதிக இருப்பு கொண்ட சுரங்கமாக இருக்கும். இது நாட்டின் தங்கத் தேவையை 25 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தங்க சுரங்கத்தின் மூலம் பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த இடத்தில் தங்க சுரங்கம் தோண்டுவதற்கான உரிமம் வழங்கும் பணிகள் முடிவடைந்த பின் விரைவில் தங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல்ஸ், பேட்டரி உற்பத்தி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகள் வளர்ச்சி அடையும் எனவும் பன்ஸ்வாரா தங்கச் சுரங்கம் புதிய பொருளாதார மையமாக ராஜஸ்தானில் உருவெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது..
மேலும் கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து தங்க சுரங்கம் செயல்பாட்டுக்கு வரும் 3வது மாநிலமாக ராஜஸ்தான் மாறவுள்ளது. பிஹார், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களிலும் தங்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது





