புதுடெல்லி: மத்திய அரசின் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய பல்துறை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் சார்பில் அதிக புரோட்டீன், இரும்புச் சத்து, போலிக்அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் அடங்கிய ‘டிசைனர் அரிசி’ ரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில், சாதாரண அரிசியைவிட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முடியும். மேலும் டிசைனர் அரிசியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (ஜிஐ) அளவு மிக குறைவாக உள்ளது. அதிக ஜிஐ அளவு உள்ள அரிசி ரகங்களால் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு விரைவாக உயரும். புதிய அரிசியில் ஜிஐ அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இதுதொடர்பாக சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிசைனர் அரிசி ரகம் தொடர்பான தொழில்நுட்பம், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், திருப்பூரை சேர்ந்த எஸ்எஸ் சோல் புட்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த ஒப்பந்த பரிமாற்றம் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் பிப். 18-ல் நடைபெறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.








