சென்னை: ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்கெனவே அரசால் அறிவிக்கப்பட்டிருந்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, சட்டப்பேரவையில் அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளை தடை செய்யும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவருவது குறித்தும் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் ரம்மி தடைக்கான சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யாத வகையில் வலுவான ஷரத்துகளை சேர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. வல்லுநர் குழுவின் கருத்துகள், பொதுமக்கள் கருத்துகள் பெறப்பட்டு, அவையும் விவாதிக்கப்பட்டது. அவசரச் சட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தச் சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர், அக்டோபர் 2-வது வாரம் நடைபெற உள்ளது. 4 நாட்கள் இக்கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள சட்ட மசோதாக்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இதில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டமும் இடம் பெறுகிறது. மேலும், புதிய தொழில் முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் சலுகைகள் வழங்குவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.