சென்னை: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் பறிக்கும் கோடிக்கணக்கான பணத்தை, ‘சைபர்’ மோசடி கும்பல் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு மாற்றுவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
இரட்டிப்பு பணம், டிஜிட்டல்கைது, பகுதிநேர வேலை, கிரிப்டோ கரன்சி, பங்குச்சந்தை முதலீடு, வாட்ஸ்-அப் ஹேக்கிங் உட்பட பல்வேறு வகையான சைபர் க்ரைம் மோசடிகள் தினமும் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் வர்த்தக பணமோசடியும் ஒன்று. இந்த வகை மோசடி செய்யும் நபர்கள் யார்? எங்கிருக்கிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? என்பன போன்ற எந்த விபரமும் தெரியாது.
ஆனால், இரட்டிப்பு லாபம், குறுகிய காலத்தில் அதிக வருமானம், அடுத்த சில மணி நேரங்களிலேயே கை நிறைய பணம் என்பன போன்ற உத்திரவாதத்தில் மயங்கி, மோசடி கும்பல் தெரிவிக்கும் போலியான ஆன்லைன் வர்த்தக தளத்தில் சிலர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து விடுகின்றனர்.
முதலீட்டு பணத்துக்கு முதலில்லாபம் வருவதுபோல் ஆசையைத் தூண்டுவார்கள். பின்னர், அவர்களை பேச்சில் மயக்கி, கையிருப்பை மட்டும் அல்லாமல் அவர்களின் பொருட்களை விற்பனை செய்தோ, அடமானம் வைத்தோ பணம் திரட்ட வைத்து, அதையும் முதலீடு செய்ய வைத்து ஒட்டுமொத்த பணத்தையும் அபகரித்து விடுவார்கள்.
ஏமாந்தவர்களில் சிலர் வெளியே தெரிந்தால் அவமானம் என எண்ணி மனதுக்குள்ளே குமுறுவார்கள். அவர்களது வாழ்வும் நிலைகுலைந்து விடும். ஆனால், மோசடி கும்பலோ வேறு நபருக்கு வலை விரிக்கச் சென்று விடுவார்கள். இப்படி, கோடிக்கணக்கான ரூபாயை சைபர் க்ரைம் மோசடி கும்பல் பறித்துள்ளது. புகார் வரும் பட்சத்தில், அந்தக் கும்பலிடம் இருந்து ஓரளவு பணத்தையே சைபர் க்ரைம் போலீஸாரால் மீட்க முடிகிறது. மோசடிக்கு மூளையாக செயல்படுபவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதிலும், கைது செய்வதிலும் சிரமம் உள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, சைபர் க்ரைம் மோசடி கும்பல் சுருட்டிய பணத்தை எப்படி அவர்களது வங்கி கணக்குக்கு மாற்றுகிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரி கூறியதாவது: அண்மையில் தொழில் அதிபர் ஒருவரிடமிருந்து ஆன்லைன் வர்த்தகம் பெயரில் ரூ.13 கோடி மோசடி செய்யயப்பட்டது. அதில், முதல்கட்டமாக அந்த பணத்தை மோசடி கும்பல் 26 வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளது. தொடர்ந்து 225 வங்கி கணக்குகளுக்கும் அதிலிருந்து 8,990, 1,518, 448 என்ற எண்ணிக்கையில் அடுத்தடுத்து 11,493 வங்கி கணக்குகளுக்கு 48 மணி நேரத்தில் மாற்றி பணத்தை சுருட்டி உள்ளனர்.
குறிப்பாக இந்த பணம் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், தமிழ்நாடு, அஸ்ஸாம், பிஹார், ஹரியானா, உத்ரகாண்ட், தெலங்கானா என 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவற்றைப் பின்தொடர்ந்து மோசடிக் கும்பலை கைது செய்வது சாதாரண காரியம் அல்ல. இதனால்தான் மோசடி பணத்தை மீட்பதிலும், நபர்களைக் கைது செய்வதிலும் சவாலாக உள்ளது.
எனவே, பொதுமக்கள் விழிப்போடு இருப்பது மட்டுமே மோசடி கும்பலிடமிருந்து தப்பிக்கும் ஒரே வழி. அதையும் மீறி யாரேனும் பணத்தை பறிகொடுத்திருந்தால் ‘1930’ என்ற தொலைபேசி எண் மூலமாகவும், www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.