நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் – ஏடிஆர் ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.!!

புதுடெல்லி: நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 30 முதல்வர்களில் 12 பேர், அதாவது 40 சதவீதம் பேர், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை அறிவித்துள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கமான ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதிகபட்சமாக, தனக்கு எதிராக 89 வழக்குகளை அறிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 19 வழக்குகளையும், கர்நாடக முதல்வர் சித்தராமையா 13 வழக்குகளையும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 5 வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் ஆகியோர் தலா நான்கு வழக்குகளையும், கேரள முதல்வர் பினராயி விஜயன் இரண்டு வழக்குகளையும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது ஒரு வழக்கும் உள்ளது. முதல்வர்களில் 10 பேர் அல்லது 33 சதவீதம் பேர் மீது கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இந்தத் தரவு அவர்கள் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களிலிருந்து பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.