கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நேற்று முன்தினம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கியதில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உயிரிழந்தனர். தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக சார்பில் அனுமதி கேட்ட இடம் ஒன்று, அவர்கள் அனுமதி கொடுத்த இடம் ஒன்று அந்தக் கட்சியினர் கூறுகிறார்கள். தமிழ்நாடு அரசின் செயல்பாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விமர்சித்துள்ளனர். மறுபக்கம் தவெகவினர் காவல்துறையினர் விதிகளை மீறியது, விஜய் தாமதமாக வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று திமுக குற்றம் சாட்டி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல மாநில முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யவில்லை என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இன்று கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
அதேபோல, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று சந்திக்கவுள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எல். முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் உடன் செல்லவுள்ளனர்.