தொடர் விடுமுறை.. ஆம்னி பஸ், விமான கட்டணங்கள் உயர்வு – சொந்த ஊர் செல்பவர்கள் அதிர்ச்சி..!

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி, வரும் 24ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் செல்ல மக்கள் ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதி வருகின்றனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும், விமான நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் சொந்த ஊர் செல்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதே போல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் இன்று முதல் விடப்படவுள்ளது.

சென்னையில் வசித்து வரும் வெளியூர்வாசிகள் விடுமுறையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். நேற்று முதலே ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்லக்கூடும் என்பதால் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாகவும் மற்றும் நாளை சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு மீண்டும் வருவதற்கும் போதுமான பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், வெளியூர்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் ஏற்கனவே அரசு பஸ்கள், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாதவர்கள் ஆம்னி பஸ்களை நாடுகின்றனர். இதனால்,கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துக்கு வழக்கமாக ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. ஏ.சி. செமி சிலீப்பருக்கு ஒரு சில பேருந்துகளில் ரூ.3,500, ரூ.4000ம் வசூலிக்கப்படுகிறது.

தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரைக்கு ஏசி சிலீப்பர் பேருந்துக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு சில பேருந்துகளில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சனிக்கிழமையிலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் ப்ரீமியர் தட்கால் டிக்கெட் கட்டணம் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்வு குறித்து புகார் தர எண்கள் அளிக்கப்பட்டிருந்தாலும் அதில் யாரும் அதிகமாக புகார் தர முன்வருவதில்லை. காரணம் பண்டிகை காலங்களில் எப்படியாவது சொந்த ஊர் போக வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிக விலை கொடுத்து பயணம் செய்கின்றனர்.

இதுபோல, விமான டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு வழக்கமாக 5,300 ரூபாய். தற்போது ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை அதிகரித்துள்ளது. மதுரைக்கு ரூ.3,600 இருந்தது. தற்போது ரூ.12000 முதல் ரூ.14,000 வரை உள்ளது. கோவைக்கு ரூ.3,500 இருந்தது. தற்போது ரூ.8,000 முதல் ரூ.13,500 வரை அதிகரித்துள்ளது. திருச்சிக்கு ரூ.3,500 கட்டணம் இருந்தது. தற்போது ரூ.6,500 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. கொச்சிக்கு ரூ.3,500 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திற்கு ரூ.5,150ல் இருந்து ரூ.12,000 முதல் ரூ.21,000 வரை அதிகரித்துள்ளது.