பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் உள்ளிட்ட 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

கோவை: சென்னை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திராவிலும் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சோதனை நடத்தப்படுகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இன்றைய தினம்,சென்னை, கோவை, நெல்லை, தென்காசி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.

தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளை குறிவைத்து சென்னை, கோவை, தென்காசி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி, உள்ளிட்ட இடங்களிலும், திருநெல்வேலியில் டவுன் காரிக்கான்தோப்பு பகுதியில் உள்ள மன்சூர் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

ஏர்வாடியிலும், தென்காசியின் அச்சன்புதூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் உக்கடம், குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் ஒரு நபர் பெங்களூருவில் பதுங்கி இருப்பது பற்றி கர்நாடகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு படை போலீசாருக்கும், தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு தனிச்சந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து வரும் நபர் வசித்து வருபவது பற்றிய தகவல்களை போலீசார் உறுதி செய்தார்கள். இதையடுத்து, கடந்த வாரம் நடத்திய சோதனையில் ஆரிப் என்பவரை கைது செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆரிப் கம்ப்யூட்டர் பொறியாளர் ஆவார். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 2 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் என்ஜினீயராக அவர் பணியாற்றி வந்துள்ளார். ஆரிப்புக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்பு தனது மனைவி, குழந்தையுடன் தனிச்சந்திரா அருகே மஞ்சுநாத் நகரில் வசித்து வந்துள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஆரிப் நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததை விசாரணையில் போலீசார் உறுதி செய்துள்ளனர். அதாவது அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு சம்பந்தப்பட்ட டெலிகிராம் குரூப், பிற குழுக்களில் ஆரிப் சேர்ந்து நிரந்தர தொடர்பில் இருந்து வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு, பெங்களூருவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தென் மாநிலங்களில் இன்று 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.