நேரு குடும்பம் மட்டும் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி ஜீரோ தான்…. மூத்த தலைவர் திக்விஜய் சிங் பரபரப்பு பேட்டி..!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிட உள்ள நிலையில், நேரு குடும்பம் தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய அக். 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூத்த தலைவர்கள் பலரும் வரிசையாகக் காங்கிரஸில் இருந்து விலகி வரும் சூழலில் இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தியே தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

அவர் மட்டுமின்றி நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவருமான அசோக் கெலாட் தேர்தலில் களமிறங்குவார் எனக் கூறப்பட்டது. இதனால் அவர் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.

ராஜஸ்தான் புதிய முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் கூட அவர்கள் புறக்கணித்து, ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சோனியா காந்தியைச் சந்தித்த அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடப் போவது இல்லை என அறிவித்தார். அதேநேரம் மூத்த தலைவரான திக்விஜய் சிங் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் விண்ணப்பத்தையும் அவர் பெற்றுக்கொண்டார். இந்தச் சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நேரு குடும்பம் மட்டும் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி ஜீரோ தான். கடந்த காலங்களிலும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்துள்ளன.

ஆனால், 99% காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நேரு குடும்பத்தை எப்போதுமே ஆதரித்து வந்துள்ளனர். நேரு குடும்பம் விடுதலைக்கு முன்பும் சரி, பின்பும் சரி இந்த நாட்டிற்குப் பெரிய சேவையைச் செய்துள்ளனர்” என்றார். காங்கிரஸ் கட்சியின் முகமாக யார் இருப்பார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “நேரு குடும்பம் இல்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு அடையாளமே இல்லை” என்று கூறி இருந்தார்.

அதேபோல ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ராஜஸ்தானில் அரங்கேறிய சம்பவம் துரதிருஷ்டவசமானது. அதை நாம் தவிர்த்து இருக்க வேண்டும். அதேநேரம் மூத்த தலைவர் அசோக் கெலாட்டிற்கு யாரும் அழுத்தம் தரவில்லை. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் எங்கள் சார்பில் கெலாட் தான் களமிறங்க இருந்தார். ஆனால், ராஜஸ்தானில் நடந்த குழப்பம் தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கிவிட்டது.

அவர் காங். தலைவர் தேர்தலில் போட்டியிட்டு இருந்தாலும் அதை அனைவரும் மதித்து இருப்போம். அவர் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்து உள்ளார். எனக்கும் சசி தரூருக்கும் இடையே இருக்கும் போட்டி என்பது விரோதிகளுக்கு இடையே நடக்கும் யுத்தம் இல்லை, ஒரே கட்சியில் இருக்கும் நபர்களுக்கு இடையேயான போட்டி தான். இருவரும் காந்தி- நேரு கொள்கையில் நம்பிக்கை வைத்து உள்ளோம். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் இருவரின் ஒரே நோக்கம்” என்றார்.