சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்துள்ளனர்.
சில விஷயங்கள் வரவேற்பையும், சில விஷயங்கள் சர்ச்சையையும் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கான மனுக்களை சமர்பிப்பதற்கு, தலைமை செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இனி உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தலைமை செயலகத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தவெக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வருகை புரியும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தலைமைச் செயலகத்தின் வெளிப்புறத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி தலைமைச் செயலகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தலைமைச் செயலகம் அதிகாரிகள் கூறுகையில், “முதலமைச்சரின் தனிப்பிரிவு வளாகம் தலைமைச் செயலகத்திற்குள் இருக்கிறது. திமுக, அதிமுக ஆட்சியில் மக்கள் அங்கு நேரடியாக சென்று புகார் அளித்து வந்தனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக வந்து புகாரளிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தலைமைச் செயலகத்தில் தினசரி கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாதுகாப்பு மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். எனவே முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்க வருவோர், தங்களின் மனுக்களை சமர்ப்பிப்பதற்காக தலைமைச் செயலகத்தின் வெளிப்புறத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வராமல் அந்தப் புகார் பெட்டியிலேயே புகார்களை சமர்ப்பிக்கலாம். இதன்மூலம் தலைமைச் செயலகத்திற்குள் வரும் கூட்டத்தையும் கணிசமாக குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.







