கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல் (வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் வேலை வாங்கி கொடுப்பது போலவும் , ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்தாராம்.
சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது
பல்வேறு இடஙகளில் கோடிக்கணக்கில் மோசடி செய்துவிட்டு கோவையில் சித்திரவேல் தங்கி இருப்பது குறித்து டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மடக்கிப்பிடிக்க திட்டமிட்டனர். நேற்று விமானம் மூலம் கோவை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சித்திரவேல் தங்கி இருந்த வீட்டில் இரவில் சோதனை நடத்தி மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான போலி அடையாள அட்டைகள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சி.பி.ஐ. அதிகாரி தோற்றத்தில் போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சித்திரவேலை, மத்திய ஆயுதப்படை போலீசாரின் உதவியுடன் தனி இடத்துக்கு கொண்டு சென்று விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது.
இன்று சித்திரவேலை, கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதி அனுமதியின் பேரில் அவரை டெல்லி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கோடிக்கணக்கில் மோசடியில் தொடர்புடையவரை கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.