சின்ன வெங்காயம் கை கொடுக்காததால் பருத்தி நோக்கி பயணிக்கும் கோவை விவசாயிகள்..!!

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையில் சீதோஷன நிலைக்கு ஏற்ப சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இது 60 நா பயிராக உள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வந்தது. தேவைக்கு அதிகமாக உற்பத்தியானதால் கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. விவசாயிகளிடம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.6 முதல் ரூ.10 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் பருத்திக்கான கிராக்கி அதிகரித்துள்ளது. தற்போது ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகிறது. பருத்தி 180 நாள் பயிராக உள்ளது.

முன்னதாக பருத்திக்கு நல்ல விலை கிடைக்காத காரணத்தால் பருத்தி விவசாயம் மேற்கொண்ட விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு சென்றனர். இதனால் மாவட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே பருத்தி பயிரிடப்பட்டு வந்தது. இதனிடையே மீண்டும் விவசாயிகள் பருத்தியை பயிரிடத் தொடங்கியுள்ளன. பருத்தியை சேமித்து வைக்க முடியும் என்று கூறும் விவசாயிகள், அதற்கான அரசு மார்க்கெட் உள்ளதாக தெரிவிக்கின்றனர். தற்போது பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

பருத்திக்கான உற்பத்தி செலவு சின்ன வெங்காயத்தை விட குறைவு. ஒரு ஏக்கர் பருத்தி பயிரிட ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் வெங்காயத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் செலவாகும்.

சின்ன வெங்காயம் கை கொடுக்காததால் பருத்தியை நோக்கி பயணிக்கும் விவசாயிகள் அரசு தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.