கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல் (வயது 53) வியாபாரி. இவர் பெரியநாயக்கன்பாளையம், பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியிருந்தார். இந்த வீட்டுமனையை வரன் முறைப்படுத்தக் கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் விண்ணப்பத்தி ருந்தார். இதையடுத்து அங்கு பில் கலெக்டராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் என்பவர் அந்த மனையை உள்ளூர் திட்ட குழுமத்தின் மூலமாக வரன்முறை படுத்த கட்டணமாக ரூ.20 ஆயிரம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார் . இது தவிர வீட்டுமனையை வரைமுறைப்படுத்த ரூ. 40 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தவேல் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறினார் .இதனால் அவரது வீட்டுமனையை வரன்முறை படுத்தாமல் இழுத்து அடித்து,காலம் தாழ்த்தி வந்துள்ளார் இதையடுத்து மீண்டும் பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். ஆனால் அதன் பின்பும் அவரது வீட்டுமனை வரன்முறை படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தவேல் இது குறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.புகாரின் பேரில் பில் கலெக்டரை கையும் களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். இதன்படி ரூ. 40 ஆயிரத்திற்கான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஆனந்த வேலிடம் கொடுத்தனர். இந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்ட ஆனந்தவேல் அங்கு பணியில் இருந்த பில் கலெக்டர் சதீஷ்குமாரிடம் கொடுத்தார் . இதை மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு மற்றும் போலீசார் சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். அவரது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், ஷீலா மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். பில் கலெக்டர் சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..
ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பில் கலெக்டர் கைது..!
