சீனா சிசிடிவி கேமராக்களுக்கு தடை!

சீ​னா​வில் தயாரிக்​கப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​களை நாளை முதல் விற்​பனை செய்ய மத்​திய அரசு தடை விதித்துள்ளது.

இந்​தி​யா​வில் விற்​பனை செய்​யப்​படும் சிசிடி​வி. கேம​ராக்​களில் மூன்​றில் ஒரு பங்கு சீனா தயாரிப்​பு​கள் ஆகும். குறிப்​பாக ஹிக் விஷன், தகுவா மற்​றும் டிபி-லிங்க் போன்ற சீன நிறு​வனங்​களின் தயாரிப்​பு​கள் இந்​திய சந்​தை​யில் அதி​கள​வில் விற்பனையாகின்றன.

இந்​நிலை​யில், சிசிடிவி கேம​ராக்​களின் பாது​காப்பு தரத்தை கடுமை​யாக்​கு​வதற்​காக தர பரிசோதனை சான்​றிதழ் (எஸ்​டிக்​யூசி) பெறு​வது கட்​டா​யம் என்ற புதிய விதி​முறையை மத்​திய அரசு நாளை முதல் அமல்​படுத்த உள்​ளது.

சீன தயாரிப்பு சிப்​கள் பொருத்​தப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​களுக்​கு, இந்த விதி​முறைப்​படி தரச்​ சான்​றிதழ் மறுக்​கப்​படும். எஸ்​டிக்​யூசி ஒப்​புதல் இல்​லாமல், சிசிடிவி கேம​ராக்​களை இந்​திய சந்​தை​யில் விற்​ப​தற்கு நாளை முதல் தடை விதிக்​கப்​படு​கிறது. இந்த தடை சீன தயாரிப்​பு​களின் விற்​பனைக்கு பலத்த அடி​யாக இருக்​கும். இதனால் உள்​நாட்டு தயாரிப்​பு​களின் விற்​பனை அதி​கரிக்​கும்.

சிபி பிளஸ், க்யூ​போ, பிர​மா, மேட்​ரிக்ஸ் மற்​றும் ஸ்பார்ஷ் போன்ற உள்​நாட்டு தயாரிப்பு சிசிடிவி கேம​ராக்​கள் விற்​பனை விரிவடையும். இந்த நிறு​வனங்​கள் சீனா​வின் உதிரி பாகங்​களை சார்ந்​திருக்​காமல், தைவான் சிப்​கள் மற்​றும் உள்​நாட்டு பொருட்களை வாங்​கும் நிலை ஏற்​படும்.

சிசிடிவி கேம​ராக்​களுக்​கான விதி​முறை​களை மத்​திய அரசின் மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப அமைச்​சகம் கடந்த 2024ம் ஆண்டு அறி​முகப்​படுத்​தி​யது. இதன்​படி தயாரிப்​பாளர்​கள் முக்​கிய பாகங்​கள், சிப்​கள் எந்த நாட்​டில் தயா​ரானவை என்​பதை தெரிவிக்க வேண்​டும். மேலும், அவை பாது​காப்பு சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டதா என்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

இதன் மூலம் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களை தவிர மற்​றவர்​கள் சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​களை பெறு​வது தடுக்​கப்​படும். புதிய வி​தி​முறை​களின்​படி இது​வரை 500 சிசிடிவி மாடல்​களுக்​கு பாது​காப்​பு தரச்​ சான்​றிதழ்​கள்​ வழங்​கப்​பட்​டுள்​ளன.