11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!

சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை உறுதி செய்வது, ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவது, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ‘புதுமைப் பெண்’ திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயில ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகிய திட்டங்களின்கீழ் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவது, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், உயர்கல்வி சேர்க்கையில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது.

இந்நிலையில், ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகளின் உயர்கல்வி தேவையை நிறைவுசெய்யும் நோக்கில், சென்னை மாவட்டம் ஆலந்தூர், செங்கல்பட்டு – செய்யூர், விழுப்புரம் – விக்கிரவாண்டி, பெரம்பலூர் – கொளக்காநத்தம், தஞ்சாவூர் – திருவிடைமருதூர், திருவாரூர் – முத்துப்பேட்டை, நீலகிரி – குன்னூர், திண்டுக்கல் – நத்தம், சிவகங்கை – மானாமதுரை, தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று 2025-26-ம் ஆண்டுக்கான உயர்கல்வி துறை மானிய கோரிக்கையில், அறிவிக்கப்பட்டது. பண்ருட்டியில் புதிய அரசு கலை, அறிவியில் கல்லூரி தொடங்கப்படும் என்று கடலூரில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், தொழில், வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, தலைமைச் செயலர் முருகானந்தம், உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் (தொழில்நுட்ப பிரிவு) வெ.சுகுமாரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 கல்லூரிகளும் வரும் 2025-26-ம் கல்வி ஆண்டு முதலே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 5 பாடப் பிரிவுகளுடன் இயங்கும். ஒவ்வொரு கல்லூரியிலும் 5 பாடப் பிரிவுகளில் ஓராண்டுக்கு 3,050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9,150 மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 உதவி பேராசிரியர் பணியிடங்கள் (முதல் ஆண்டுக்கு மட்டும்), 14 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் என 11 கல்லூரிகளுக்கும் மொத்தம் 132 உதவி பேராசிரியர்கள், 154 ஆசிரியர் அல்லாத பணியாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 11 கல்லூரிகளுக்கும் ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடரா செலவினமாக ரூ.25.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 கல்லூரிகளை சேர்த்து, தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.