ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்.!!

சென்னை: ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகளுக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலும் மீட்புப்பணிகள், அழைப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தலைமைச் செயலாளர் இறையன்பு டிஜிபி , சைலேந்திரபாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், விபத்து நிகழ்ந்த உடனே ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கிடம் கேட்டறிந்தேன். இது குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையும் தெரிவித்தேன். உடனடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அமைச்சர் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து நமக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிப்பார்கள். அங்கேயே தங்கியிருந்து மீட்பு நிவாரண பணிகளை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு முதலே உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னக ரயில்வே மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்துள்ளேன். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வரவும், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிப்பவர்களுக்காகவும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியுள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் முதற்கட்டமாக விமானம் மூலம் திரும்ப உள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். இந்த சூழ்நிலையில் இன்று ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் 100வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில நிர்வாகத்தோடு அதிகாரிகள் தொடர்பில் இருக்கின்றனர். மருத்துவ மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். விபத்தில் உயிரிழந்த தமிழக பயணிகளின் உறவினர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 900 பேர் வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.