உங்களில் ஒருவன் நூலை படித்துவிட்டு பாராட்டிய நடிகர் ரஜினிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி..!

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது.

ராகுல் காந்தி நூலை வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்நூலில் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள், இளமைப்பருவம், ஆரம்பநிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என, 1976ம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், ‘உங்களில் ஒருவன்’ நூலைப் படித்துவிட்டு தொலைபேசியில் தன்னைப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”எனது ‘உங்களில் ஒருவன்’ நூலை படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும், இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.