இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மிழகத்தில் நேற்றைய தினம் தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்றைய தினம் வழக்கம் போல வறண்ட வானிலையே நிலவியது.

அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்தும், தென் தமிழக மாவட்டங்களில் குறைந்தும் ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. நேற்றைய தினம் வேலூர், மதுரை ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, திருத்தணி ஆகிய பகுதிகளில் வெயில் சதமடித்துள்ளது.நேற்றைய தினம் அதிகபட்சமாக வேலூர் மாவட்டங்களில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையாக சமவெளி பகுதியான சேலத்தில் 23.1 டிகிரியும், மலைப் பகுதியாக கொடைக்கானலில் 11.7 டிகிரியும் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக ஏப்ரல் 5 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், தேனி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், தேனி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மாலை வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 6ம் தேதி அன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஒருசில இடங்களில், இடி, மின்னுலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் வறண்ட வானிலை நிலவக்கூடும். விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஏப்ரல் 7 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, வரும் ஏப்ரல் 11ம் தேதி வரை மழை தொடரும்.

ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 7 ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். தென் தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் இருக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இன்று முதல் ஏப்ரல் 9 வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. எனவே, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு செல்லலாம்.