கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ளவர் உள்பட சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அடுத்த கட்டமாக நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 3டி லேசர் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளுடன் சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுசாமிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியாகினர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழுவின் கீழ் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கடந்த 16ஆம் தேதி கரூருக்கு வந்து விசாரணையை தொடங்கினர். கடந்த 19ஆம் தேதி தீபாவளி விடுமுறைக்காக சென்ற சிபிஐ குழுவினர் நேற்று மீண்டும் கரூர் வருகை தந்து விசாரணையை தொடங்கினர். எஸ்ஐடி குழுவிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை மீண்டும் ஆய்வு செய்து சிபிஐ விசாரணை தொடங்கியது.
கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனிவண்ணன் அரசு சுற்றுலா மாளிகைக்கு நேற்று சென்றார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். சிபிஐ விசாரணை சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், சாட்சியங்களை விசாரிப்பதற்காக பொதுமக்கள், அப்பகுதியில் கடைகளை வைத்து இருந்தவர்கள் என பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வேலுசாமிபுரத்தில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்துள்ள ஒருவர், போட்டோகிராஃபர் என 4 பேர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து நீங்கள் அறிந்திருந்தால், சாட்சியங்களுக்காக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்தனர். எஸ். பிரவீன் குமார் தலைமையிலான 12 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு விசாரணையை நடத்தி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அளவீட்டு கருவிகள், கேமரா, 3டி ஸ்கேனர் கருவி ஆகியவற்றுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சிபிஐ அதிகாரிகளுடன் உள்ளூர் போலீசாரான டிஎஸ்பி செல்வராஜ் தலைமையிலான போலீசாரும் உடன் இருந்தனர்.







