அன்புமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காலப்போக்கில் பெரிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்தது. இதனால், பாமக தொண்டர்களும், நிர்வாகிகளும் இருவர் தலைமையிலும் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இதற்கிடையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, அன்புமணி தலைமையிலான பாமக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான பாமக அணி எந்த அணியில் இடம் பெறும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனிடையே, பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு குறித்தான கடிதத்தைத் தேர்தல் ஆணையம் அன்புமணியின் முகவரிக்கு அனுப்பியிருந்தது. இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பினர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பாக அந்த மனுவில், ‘பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், தற்போதும் அவர் பாமகவில் தலைவராக இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார். அதனால், அவரின் முகவரிக்குச் சென்ற கடிதத்தை ரத்து செய்துவிட்டு தங்களின் முகவரிக்கு அனுப்ப வேண்டும்’ என ராமதாஸ் தரப்பினர் தெரிவித்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்யவேண்டுமென கூறியது. அதன்படி, ராமதாஸ் தரப்பு, உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த மனு தொடர்பாகத் தேர்தல் ஆணையம், அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்திருந்தினர். இந்த வழக்கின் விசாரணை  (13-03-26) விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், பா.ம.க கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளரான தன்னையும் இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வடிவேல் ராவணன் தொடுத்த வழக்கு தொடர்பாக ராமதாஸ் உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.