இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு..?

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக மக்கள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்வது, மின்சார கட்டணம் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அளவில் பேசு பொருளாக இருக்கும் பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்களையும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் வழங்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைப்பதா அல்லது நேரடியாக மக்கள் பார்வைக்கு வெளியிடுவதா என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

அதேபோல் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்விக் கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.