திருப்பூரைச் சேர்ந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது இவர் மராட்டிய மாநில கவர்னராக உள்ளார் .இவர் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஷெரீப் காலணியில் வசிக்கும் அவருடைய தாயார் ஜானகி அம்மாளை நேற்றிரவு பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயார் ஜானகி அம்மாள் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது .அவர் வெற்றி பெற இறைவன் அருள் புரிய வேண்டும். தமிழகத்துக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி சொல்கிறேன். பாஜக கட்சியில் சேர்ந்து பணியாற்றுவதற்கு கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறேன். இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர். ராதாகிருஷ்ணனை நினைத்து என் மகனுக்கு சிபி ராதாகிருஷ்ணன் என்று பெயர் வைத்தோம். துணை ஜனாதிபதியாக வருவார் என்று நாங்கள் அப்போது நினைக்கவில்லை. ஆனால் இப்போது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது அதற்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பு – தாயார் நெகிழ்ச்சி.!!
