தொழிலதிபரிடம் இரு மடங்கு லாபம் தருவதாக கூறி ரூ.71 லட்சம் மோசடி – கணவன், மனைவிக்கு வலைவீச்சு..!

கோவைபுதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62) தொழிலதிபர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த சஞ்சய் ரெட்டி – லாவண்யா தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு மாணவர்களை படிக்க அனுப்பும் கல்வி மையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், சினிமா பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர் .மேலும் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 2 மடங்கு லாபத்துடன் பணத்தை திருப்பி தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். இதனை நம்பிய முருகேசன் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் கடந்த 2024 -ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் வரை தொடர்ந்து ரூ 71 லட்சம் பணம் அனுப்பினார். அதன் பிறகு அவர் லாபத் தொகையில் பங்கு தரும்படி கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி முருகேசனுக்கு லாபத் தொகை எதுவும் கொடுக்கவில்லை. இதனால் முருகேசன் ஏமாற்றம் அடைந்ததை  தொடர்ந்து தான் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டார் . அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர் .இது தொடர்பாக முருகேசன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து சஞ்சய் ரெட்டி மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோரை தேடி வருகிறார்.