சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல்-பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க வினர் வெளிநடப்பு.!!

தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார். நிதி அறிக்கையில் மகளிர் உரிமை தொகையான ரூ.1000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,  இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முன்னதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நிதி நிலை அறிக்கை புத்தகத்தோடு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவை அரங்கத்திற்கு வந்த முதலமைச்சருக்கு திமுக உறுப்பினர்கள் மேஜை தட்டி வரவேற்றனர்.

இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எதிர்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொளவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் தனது முழு நிதி நிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்டார் ஆனால் சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவித்து கொண்டே இருந்தனர். சபாநாயகர் அப்பாவு அதிமுகவினர் பேசுவது எதுவும் அவை குறிப்பில் ஏறாது என தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். இருந்த போதும் நீண்ட நேரமாக தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். சபாநாயகர் தனது இருக்கையில் எழுந்து அனைவரும் உட்காரும்படி கூறிக்கொண்டே இருந்தார். இருந்த போதும் தொடர்ந்து அதிமுகவினர் கூச்சலை எழுப்பி கொண்டே இருந்தனர். இதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே சென்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக பட்ஜெட்டை புறக்கணித்ததாக அதிமுகவினர் தெரிவித்தனர்.