2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் : நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடக்கம்..!

2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தொடங்குகிறார்.

அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் பருநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கு அதிகமான முக்கியத்துவம், சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் 3 பிரிவுகளுடன் நடத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார். தொழிற்துறையைச் சேர்ந்தவர்கள், உள்கட்டமைப்புத் துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்களுடன் ஆலோசனை பெற்று, 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டை வடிவமைக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

நாளை(22ம்தேதி), வேளாண்துறையினர், உணவுப் பதப்படுத்துதல் துறையினர், நிதித்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், மூலதனத் சந்தையைச் சேர்ந்தவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தஉள்ளார்.

சேவைத்துறையின் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சமூகநீதித்துறை வல்லுநர்கள், சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் நீர்வளம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற வல்லுநர்களுடந் வரும் 24ம் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வர்த்தக கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், பொருளாதார வல்லுநர்கள் ஆகியோருடன் வரும் 28ம் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தங்களின் ஆலோசனைகளை 2023-24ம் ஆண்டுபட்ஜெட்டுக்காக வழங்க உள்ளனர்.

பல்வேறு பிரிவினரின் ஆலோசனைகள், குறைகள், செய்ய வேண்டிய தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்து 2023ம் ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் அதிகபட்சமாக பருவநிலை மாறுபாடு பிரச்சினைகளைச் சமாளிக்க அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும். அது சார்ந்த துறைகள், தொழில்கள் ஆகியவற்றுக்கு சலுகைகள், கடன்கள், ஊக்குவிப்புகள் அதிக அளவில் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

நாட்டில் தற்போது பணவீக்கம் 6 சதவீதத்தைக் கடந்து செல்கிறது இதைக் குறைக்கும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தேவையை அதிகப்படுத்தவும், வேலை உருவாக்கம் செய்வதிலும், பொருளாதாரத்தை 8 சதவீத வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லவும் அதிகமான முக்கியத்துவத்தை பட்ஜெட்டில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் நிர்மலா சீதாராமன் 5வது மற்றும் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024ம் ஆண்டுதேர்தல் வந்துவிடும் என்பதால் அப்போது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது, இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.