கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள இலுப்பநத்தம், திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சந்தானம் ( வயது 62) இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தம்பி பாண்டியன் ( வயது 58) டெய்லர் .இவர் தனது தாயார் விஜயாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். தனது தாயாரை பார்ப்பதற்கு சந்தானம் அடிக்கடி சிறுமுகைக்கு வருவார். கடந்த 9-4- 20 22 அன்று தாயைப் பார்க்க வந்தார். அப்போது சந்தானம் தனது தாயார் ஏன் சரியாக கவனிக்கவில்லை என்று தம்பி பாண்டியனிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் வீட்டு வாடகை பகிர்ந்து கொள்ளாதது குறித்தும் கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்து சந்தானம் துணி வெட்ட பயன்படுத்தும் கத்திரிக்கோலை எடுத்து தம்பி பாண்டியனை சரமரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தானத்தை கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை கோவை 5 – வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமீனில் விடுதலையான சந்தானம் பின்னர் கோர்ட்டுக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலை மறைவானார்.. எனவே அவரை கைது செய்யுமாறு கோர்ட்டு பிடிவாண்ட உத்தரவு பிறப்பித்தது. அதன் பெயரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சந்தானத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது .வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சந்தானத்திற்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மோகன் பிரபு ஆஜராகி வாதாடினார்.
தம்பி குத்தி கொலை – அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!






