அமெரிக்காவை வாட்டி வதைக்கும் பனிப்புயல்..!!

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த புயல், அமெரிக்காவின் 12 மாகாணங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் அங்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 14 கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்றினாலும், பனிப்பொழிவினாலும் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில், சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. கடும் குளிர் மற்றும் பனி தொடர்பான விபத்துக்களால் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சேவைகள் உட்பட மொத்தம் 11,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பல அடி உயரத்திற்குப் பனி குவிந்துள்ளதால் வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது.

பென்சில்வேனியா & ஹட்சன் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிகபட்சமாக 63 செ.மீ வரை பனி கொட்டியுள்ளது. உலகப் புகழ்பெற்ற நியூயார்க் நகரில் 25 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வாளர்கள் இந்தப் புயலை ‘பாம் சைக்ளோன்’ என்று அழைக்கின்றனர். வளிமண்டல அழுத்தம் மிக வேகமாக வீழ்ச்சியடைவதால் ஏற்படும் இந்த வகை புயல்கள், அதிவேகக் காற்றையும் கனமான பனிப்பொழிவையும் உருவாக்குகின்றன.

தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா உள்ளிட்ட 12 மாகாணங்களில் அவசரநிலை அமலில் உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு அந்தந்த மாகாணங்களுக்குத் தேவையான நிதி மற்றும் மீட்புப் பணிகளை உடனடியாக வழங்க முடியும். பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரிகளுக்கும் கீழே சென்றுள்ளதால், சில நிமிடங்கள் வெளியே நின்றாலே ‘உறைபனி காயம்’ ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பனிப்புயலின் தாக்கத்தால் மெய்னே மாகாணத்தில் நேற்று நடந்த தனியார் ஜெட் விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தது இந்தத் துயரத்தின் ஒரு பகுதியாகும்.