சென்னையின் சில பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக எழுந்த புகார் தெரிவித்த பத்திரிகையாளரிடம் சென்னை மேயர் பிரியா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை மாநகராட்சியில் சமீப நாட்களாக ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (மே 2) பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்களால் பவுடர் தெளிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக அப்பகுதிக்கு வந்த மேயர் பிரியாவிடம், தெளிக்கப்பட்ட பவுடரை எடுத்து வந்து, அதில் பிளீச்சிங் பவுடர் மணமே வரவில்லை என செய்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.
அதனை முகர்ந்து பார்த்த மேயர் பிரியா, “பிளீச்சிங் பவுடர் மணம் வருகிறது. வேறென்ன பவுடர் போடுவாங்க… இதென்ன ஃபாண்ட்ஸ் பவுடரா?” என கேள்வி எழுப்பியபடி விரக்தியுடன் காரில் ஏறினார்.
அதனைத் தொடர்ந்து தொடர்ந்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரிடம் ‘நீங்கள் என்ன சேனல்?’ என்று கேட்டு மிரட்டியபடி அங்கிருந்து புறப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு தெளிக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது சென்னையின் பல பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு தெளிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.