மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், தேசியவாத கட்சியின் தலைவருமான அஜித் பவார் நேற்று விமான விபத்தில் பலியானார். அவருக்கு வயது 66. மும்பையில் இருந்து நேற்று காலையில் அஜித் பவார் பாராமதிக்கு சிறிய ரக தனி விமானத்தில் புறப்பட்டார். பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது.
அப்போது எதிர்பாராத விதமாக இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார், அவரது ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர், 2 பைலட்டுகளான சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகியோரும் பலியாகினர். பயணித்த 5 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தது நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது.
இந்த விமான விபத்து பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலையில் விமான விபத்து விசாரணைப் பணியகத்தை (AAIB) சேர்ந்த மூன்று அதிகாரிகளும், டிஜிசிஏ எனும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் மும்பை மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும், தடயவியல் துறையினரும் விபத்து நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தான் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி (Black Box) இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்படும் பட்சத்தில் விமானம் விபத்தில் சிக்கியதற்கான முழுமையான காரணம் தெரியவரும்.
அதாவது விமானத்தின் வேகம், விமானம் பறக்கும் உயரம், விமானத்தின் இருப்பிடம், விமானத்தில் ஏற்படும் அதிர்வுகள், விமானிகளின் உரையாடல்கள் உள்பட பல முக்கிய விஷயங்கள் இந்த கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும். இதன்மூலமாக விமானத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த விஷயங்களை சேமித்து வைக்கப்பதற்காக கருப்பு பெட்டியில் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களும், சென்சார் கருவிகளும் இருக்கும். அதில் தான் விமானத்தின் முழு தகவல்களும் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்.
இந்த கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதன் மூலமாக விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானத்தில் என்ன நடந்தது? விமானிகள் கடைசியாக என்ன பேசினர்? என்பதை புரிந்து கொண்டு விபத்துக்கான காரணத்தை அறிய முடியும்.
கருப்பு பெட்டி.. கருப்பு பெட்டி என்று கூறப்படும் இந்த பெட்டி உண்மையில் கருப்பு நிறத்தில் இருக்காது. அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பல விமானங்கள் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகலாம். அப்போது விமானங்களின் பாகங்கள் கடலின் ஆழத்தில் மூழ்கலாம்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் இதற்கு ஆரஞ்சு பெட்டி என்றே பெயர் வைத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்போருக்கும் விடையை தருகிறோம்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் முதலில் விமானத்தில் கருப்பு பெட்டி கருப்பு நிறத்தில் தான் இருந்தது. அதன்பிறகு தான் கருப்பு பெட்டியின் நிறம் மாற்றப்பட்டது. இதனால் தான் ஆரஞ்சு நிறமாக கருப்பு பெட்டி மாறினாலும் தொடர்ந்து கருப்பு பெட்டி என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கருப்பு பெட்டி விமானத்தின் வால் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். இதன் பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது. அது என்னவென்றால் விமான விபத்துகளின்போது விமானத்தின் முழு பாகங்களும் எரிந்தாலும், உடைந்தாலும் கூட வால் பகுதியில் சேதம் அதிகம் இருக்காது. இதனால் தான் அங்கு கருப்பு பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தான் அஜித் பவார் விபத்தில் சிக்கிய விமானத்தின் வால் பகுதியில் இருந்து கருப்பு பெட்டி கைப்பபற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.







